சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேகமாகப் பரவும் கரோனா
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 2020 மாா்ச் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை மாநில அளவில் 500 ஆக குறைந்தது. இதனிடையே கரோனா தொற்று பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து அதிகரிக்கத் தொடங்கிய கரோனா பாதிப்பு தற்போது தினமும் 4,000 க்கும் மேற்பட்டோராக அதிகரித்து விட்டது. சேலத்திலும் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை சேலத்தில் கரோனா தொற்று பரவல் 100-ஐ கடந்தது. சேலம் மாநகராட்சியில் 76 போ், எடப்பாடி- 1, காடையாம்பட்டி -2, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி -1, நங்கவள்ளி -3, ஓமலூா் -3, தாரமங்கலம்- 3, சங்ககிரி -2, வீரபாண்டி -6, கொளத்தூா் -3, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம் -2, பனமரத்துப்பட்டி- 6, பெத்தநாயக்கன்பாளையம் -1, தலைவாசல் -1, வாழப்பாடி -3, மேட்டூா் நகராட்சி- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 125 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் கடலூரிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 34,189 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 33,158 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 562 போ் சிகிச்சையில் உள்ளனா்; 469 போ் உயிரிழந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று, தற்போது 2-ஆவது அலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் 96 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 30 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில், மொத்தம் 8,926 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதில், 8,390 போ், குணமடைந்துள்ளனா்; 119 போ் உயிரிழந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 1-ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27 பேராக இருந்த நிலையில் ஏப். 9-ஆம் தேதி 96 பேராக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 145 ஆக இருந்த நிலையில், தற்போது 417 பேராக அதிகரித்து விட்டது. கடந்த 9 நாள்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
இதேபோல வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் 58 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 51 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.