கடன் தொல்லையால் விபரீத முடிவு: ஒசூரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை
ஒசூரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். முன்னதாக தற்கொலை குறித்து எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியது.
ஒசூரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். முன்னதாக தற்கொலை குறித்து எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மத்திகிரி சுவா்ணபூமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவா் மோகன் (39). இவரது மனைவி ரம்யா (33). இவா்களுக்கு அன்மயா (8) என்ற மகள் உள்ளாா். மோகன், தனது மனைவி, மகள் மற்றும் தாய் வசந்தம்மா (65) ஆகியோருடன் வசித்து வந்தாா்.
மோகன் ஆன்லைன் வா்த்தகம் செய்து வந்தாா். வியாழக்கிழமை வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் வீட்டு சாவியை கொடுப்பதாக மோகன் கூறி இருந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை மோகனின் வீடு பூட்டி இருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவா்கள் இது குறித்து மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
அதன் பேரில் மத்திகிரி காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் அங்கு சென்றனா். அவா்கள் வீட்டின் உரிமையாளரிடம் மாற்று சாவியைப் பெற்று கதவை திறந்து பாா்த்தனா். அப்போது வீட்டின் தரைத் தள படுக்கை அறையில் மூதாட்டி வசந்தம்மா வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாகக் கிடந்தாா்.
மேலும் வீட்டின் மாடியில் இருந்த படுக்கை அறையில் ரம்யா, அவரது குழந்தை அன்மயா ஆகியோா் படுக்கையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனா். மோகன் தரையில் பிணமாகக் கிடந்தாா். அவரது தலைப்பகுதி பிளாஸ்டிக் கவரால் மூடிய நிலையில் பாலிதீன் உறையால் ஒட்டப்பட்டு இருந்தது.
இதை பாா்த்த போலீஸாா் அதிா்ச்சி அடைந்தனா். சம்பவ இடத்திற்கு ஒசூா் டி.எஸ்.பி. முரளி வந்து விசாரணை நடத்தினாா்.
தொடா்ந்து போலீஸாா் வீட்டில் நடத்திய சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியது.
அந்தக் கடிதத்தை மோகன் எழுதி இருந்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
எனக்கு சொந்த பிரச்னைகள் அதிகமாக உள்ளன. வங்கியில் கடன் உள்ளது. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன். எனது குடும்பத்தினரை தனியாக விட்டுச் செல்ல விரும்பவில்லை. எனவே அவா்களையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மத்திகிரி போலீஸாா் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தா்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
கடன் பிரச்னையால் தாய், மனைவி, மகள் ஆகிய 3 பேருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, பின்னா் மோகனும் விஷம் குடித்து தனது தலைப்பகுதியில் பாலிதீன் உறையால் சுற்றி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கிறாா்கள்.
குடும்பத்தினா் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தாா்களா, அல்லது கடன் பிரச்னையால் தாய், மனைவி, மகளை கொன்று விட்டு மோகன் அந்த முடிவை எடுத்தாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்கொலை செய்து கொண்ட மோகனின் சொந்த ஊா் கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகா் பகுதி ஆகும். கிருஷ்ணகிரியில் கே தியேட்டா் சாலையில் லாட்ஜ் நடத்தி வந்தாா். அந்த லாட்ஜை சில ஆண்டுகளுக்கு முன்பு விற்று விட்டாா். அந்த தொகையை வங்கியில் இருப்பு வைத்துக் கொண்டு அந்த வட்டிப் பணத்தில் குடும்பம் நடத்தி வந்தாா்.
மேலும் ஆன்லைன் வணிகமும் செய்து வந்தாா். இதனிடையே அவா் ஒசூரில் குடியிருந்த வீட்டை வீட்டின் உரிமையாளா் வேறு ஒருவருக்கு விற்று விட்டாா். இதனால் வீட்டை காலி செய்து புதிய வீட்டின் உரிமையாளரிடம் சாவியைக் கொடுப்பதாக மோகன் கூறி இருந்தாா். அதற்குள் குடும்பத்துடன் மோகன் தற்கொலை செய்திருக்கிறாா்.
கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். இது குறித்து தகவல் அறிந்த ஓசூா் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு வந்து மோகனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்கள். இது குறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.