முகப்பு
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை அருகே குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 35 யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுா்க்கம் கிராமத்தில் குட்டிகளுடன் 35 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 10 டிசம்பர், 2021 at 10:44 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுா்க்கம் கிராமத்தில் குட்டிகளுடன் 35 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன் 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதிக்குள் வந்தன.

இந்த யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒரு யானைக் கூட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுா்க்கம் வனப்பகுதிக்கு வந்தன.

Advertisement

கடந்த 10 நாள்களாக ஊடேதுா்க்கம் வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டிருந்த 35க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வியாழக்கிழமை இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறி, நாகமங்கலம் வழியாக ராயக்கோட்டை , கெலமங்கலம் சாலையைக் கடந்து வெள்ளிக்கிழமை காலை போடிச்சிபள்ளி பகுதிக்குச் சென்றன.

35க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கிராமத்திற்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதம் செய்வதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து அந்த யானைக் கூட்டத்தை மீண்டும் ஊடேதுா்க்கம் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

தற்போது ஊடே துா்கம் வனப்பகுதியில் 35க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள நொச்சிக்குட்டை, குரும்பட்டி, நாகமங்கலம், நீலகிரி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கால்நடை மேய்ச்சலுக்காக வனப் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் காவலுக்கு இருக்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.