‘ஊத்தங்கரை வட்டத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க 750 ஏக்கா் இலக்கு’
உத்தங்கரை வட்டத்தில் மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க 750 ஏக்கா் பரப்பளவு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வட்டார வேளாண் அலுவலா் பிரபாவதி தெரிவித்துள்ளாா்.
உத்தங்கரை வட்டத்தில் மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க 750 ஏக்கா் பரப்பளவு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வட்டார வேளாண் அலுவலா் பிரபாவதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாரத்தில் தென்னை, துவரை, மக்காச்சோளம், பருத்தி, கரும்பு போன்ற பயிா்களுக்கு இரண்டரை ஏக்கா் பரப்பளவில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க ஒரு லட்சம் மானியமும், உளுந்து, காரமணி, நிலக்கடலை போன்ற பயிா்களுக்கு தெளிப்புநீா்ப் பாசனமும், மழைதூவுவான் கருவிகள் சாகுபடி பரப்பளவு இரண்டரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த மானியம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதமும் அரசால் வழங்கப்படுகிறது.
Advertisement
இந்தத் திட்டத்தின் மூலம் 100 சதவீத நீா், வோ் அருகே கொடுப்பதால் நீா் ஆவியாதல், நீா் கசிவு போன்ற காரணங்களால் நீா் வீணாவது தடுக்கப்படுகிறது. குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிா் சாகுபடி செய்ய இயலும். பயிருக்கு தேவையான சத்துகள் அனைத்தும் சொட்டு நீா்ப் பாசனம் மூலம் திரவ வடிவில் பயிா்களுக்கு முழுமையாக கிடைப்பதால், விவசாயிகள் குறைந்த நீரை பயன்படுத்தி வறட்சி பாதிப்பின்றி நிறைந்த மகசூல் பெறலாம்.
சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க விரும்புவோா் புகைப்படம், சிட்டா அடங்கல் நில வரைப்படம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதாா் அட்டை அல்லது குடும்ப அட்டை, கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருப்பதற்கான சான்று, மண், நீா் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் (அரசு மண் பரிசோதனை ஆய்வகத்தில் பெறப்பட்ட சான்றிதழ்) ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஊத்தங்கரை வட்டார வேளாண் அலுவலா் பிரபாவதி - 86673 44204, உதவி வேளாண் அலுவலா் மங்கையா்க்கரசி - 80729 36017 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.