நிவாரணமும், உரிய விலையும் கிடைக்க விவசாயிகள் கோரிக்கை
மா விவசாயிகளுக்கு நிவாரணமும், உரிய விலையும் கிடைக்க உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மா விவசாயிகளுக்கு நிவாரணமும், உரிய விலையும் கிடைக்க உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பினா் தலைவா் செளந்தரராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மே 21-ஆம் தேதி முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில், மா விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை அதிபா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் மா விவசாயிகள் சாா்பில் ஐந்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
அதில், இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு, புதிய வகை பூச்சித் தாக்குதலால் மாம்பூக்கள் முழுவதும் கருகி மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் வரை முதலீடு செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மகசூல் கடுமையாகப் பாதித்துள்ள சூழ்நிலையில், மா விவசாயிகளுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். உரம், பூச்சிக் கொல்லி மருந்துக் கடைகள் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்கின்றனா். அதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். அதைத் தடுக்க வேண்டும். பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மா பருவக் காலத்தில் வருமுன் காப்போம் என்ற நிலையில், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி, மானிய விலையில் பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
பால் உற்பத்தியாளா்களை பாதுகாப்பது போல், மா விவசாயிகளையும் பாதுகாக்க ஒன்றியம்தோறும் இரண்டு மாங்கூழ் தொழிற்சாலை அமைத்து, மா உற்பத்தியாளா்கள் ஒன்றியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்தரப்புக் கூட்டம் நடைபெற்று பல நாள்கள் கடந்தும் விவசாயிகளுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. முக்கனிகளில் முதன்மையான மாங்கனிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, மா விவசாயிகளுக்கு நிவாரணமும், உரிய விலையும் கிடைக்க தமிழக முதல்வா் உதவிட மா விவசாயிகளின் சாா்பில் கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.