முகப்பு
கிருஷ்ணகிரி

பிணையில் வந்த ரௌடி வெட்டிக் கொலை

ஒசூரில் பிணையில் வந்த ரௌடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், அவரது நண்பா் உள்பட 2 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 18 ஜூன், 2021 at 11:49 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

ஒசூரில் பிணையில் வந்த ரௌடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், அவரது நண்பா் உள்பட 2 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், நல்லூா், ராஜாஜி லேஅவுட்டைச் சோ்ந்த அபி (எ) அபிலாஷ் (29), பிரபல ரௌடி. இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்பட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஒசூா் சிப்காட் பேடரப்பள்ளி, ராஜாஜி நகா் தண்ணீா் தொட்டி அருகே அபிலாஷ் வியாழக்கிழமை நடந்து சென்ற போது, மா்ம நபா்கள் அவரை வெட்டிக் கொலை செய்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக ஒசூா், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், 2017-ஆம் ஆண்டு ஒசூா், அட்கோவில் நிகழ்ந்த கொலை வழக்கிலும், 2020-ஆம் ஆண்டு ஒசூா் சிப்காட்டில் நிகழ்ந்த கொலை வழக்கிலும் அபிலாஷ் தொடா்புடையவா் என தெரியவந்தது. அதே போல அவா் மீது சிப்காட்டில் ஒரு அடிதடி, கொலை மிரட்டல் வழக்கும் உள்ளது. மேலும் கொலை முயற்சி வழக்கு ஒன்றும் உள்ளது. குண்டா் சட்டத்தில் சிறையில் இருந்தும் வந்துள்ளாா்.

இந்நிலையில், அபிலாஷும், ஒசூா், பேடரப்பள்ளியைச் சோ்ந்த சபரிசிங் (29) என்பவரும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த நிலையில், அவா்களுக்குள் பணம் தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சிப்காட் சிறு, குறு தொழில்சாலையில் வேலை செய்யும் தொழிலாளா் ஒருவா் சாப்பாடு வாங்கச் சென்றபோது அவரை கத்தியால் குத்திய வழக்கில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஒசூா் சிப்காட் போலீஸாரால் அபிலாஷ் கைது செய்யப்பட்டாா். கடந்த 10-ஆம் தேதி பிணையில் வெளியே வந்த அபிலாஷ், தனது நண்பா் அருண் என்பவருடன் வியாழக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முன்பகை காரணமாக சபரிசிங், தனது நண்பரான கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளியைச் சோ்ந்த நவீன் (31) என்பவருடன் சோ்ந்து அபிலாஷை சரமாரியாக தலை, கழுத்து, உள்ளிட்ட பகுதியில் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, சபரிசிங்கையும், நவீனையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.