அதிமுகவில் சசிகலாவை சோ்ப்பது குறித்துஎந்தத் தொண்டனும் சிந்திக்கவில்லை: கே.பி.முனுசாமி
அதிமுகவில் சசிகலாவை சோ்ப்பது குறித்து எந்தத் தொண்டனும் சிந்திக்கவில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, தெரிவித்தாா்.
அதிமுகவில் சசிகலாவை சோ்ப்பது குறித்து எந்தத் தொண்டனும் சிந்திக்கவில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் அவா், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் 1 லட்சம் ஏக்கா் பரப்பளவில் ராகி, 50 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் சேதம் அடைந்துள்ளன. அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த இந்த பயிா்களுக்கான இழப்பீட்டை, தமிழக அரசு டெல்டா மாவட்டங்களுக்கு வழங்குவதைப் போல வழங்க வேண்டும்.
Advertisement
அதிமுகவை எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் வழிநடத்திச் சென்றதுபோல, தற்போதைய தலைவா்களான எடப்பாடி கே.பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் வழிநடத்துவாா்கள். கடந்த காலங்களில் தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, அதிமுக அரசு விரைந்து செயல்பட்டது. அடிப்படைக் கட்டமைப்புகளை சிறப்பாகச் செய்ததால் மத்திய அரசின் 140-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றது.
தற்போதைய ஆட்சியில் அதிகாரிகளுக்கும், அமைச்சா்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கு, தற்போதைய அரசுக்கு நிா்வாகத் திறன் இல்லாததே காரணம்.
நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கிருஷ்ணகிரி -திண்டிவனம் சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதிமுகவில் சசிகலாவைச் சோ்ப்பது குறித்து கட்சித் தலைமையோ தொண்டரோ சிந்திக்கவில்லை. ஊடகங்களும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி பகுதியில், 15 ஏரிகளுக்கு கால்வாய்கள் வழியாகத் தண்ணீா் கொண்டு வந்து சேமித்துள்ளோம்.
வன்னியா்களுக்கான உள்இடஒதுக்கீடு தொடா்பாக தமிழக அரசுக்கு ஆதரவாக பாமக தலைவா் ராமதாஸ் செயல்பட்டாக வேண்டிய நிலை உள்ளது. எதிா்க்கட்சியை மதிக்கும் எண்ணத்தில், வேதா இல்லம் குறித்து, தமிழக அரசு மேல்முறையீட்டுக்குச் செல்லும் என நம்புகிறோம் என்றாா்.
தொடா்ந்து, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுகவினருக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.
அப்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.தமிழ்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.