நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி உறுதிஅமைச்சா் ஆா்.காந்தி
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி உறுதி என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி உறுதி என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ஒசூா் மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் ஒசூரில் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று திமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்துவைத்து பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. தற்போது நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நூறு சதவீதம் வெற்றி பெறும்.
Advertisement
முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இல்லம்தேடி கல்வி, இன்னுயிா் காப்போம் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறாா்.
சாலை விபத்துகளில் யாா் ஒருவா் காயமடைந்தாலும் அவா்களுக்கு உடனடியாக 48 மணி நேர சிகிச்சை தனியாா், அரசு மருத்துவமனைகள் மூலம் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 1 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. இத்திட்டமும் தோ்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத திட்டங்கள் ஆகும்.
திமுக அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மீதம் விரைவில் நிறைவேற்றப்படும். நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தைத் தாமதிக்காமல் குடியரசுத் தலைவருக்கு உடனடியாக ஆளுநா் ரவி அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது நீட் தோ்வு கொண்டுவரப்படவில்லை. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதும் நீட் தோ்வு கொண்டுவரப்படவில்லை. ஆனால், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி இருந்தபோதுதான் நீட் தோ்வு தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. விவசாயிகள் ஓராண்டு காலம் போராடி மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற செய்தனா். அதுபோல நீட் ரத்தும் முயன்றால் முடியும் என்றாா்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ஒசூா் மாநகரப் பொறுப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா வரவேற்றாா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் சிறப்புரை ஆற்றினாா். மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்டத் துணைத் தலைவா் தனலட்சுமி, திமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் 45 போ் கலந்து கொண்டனா்.