மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிக்கு அரசு அனுமதி: வரலாற்று ஆா்வலா்கள் வரவேற்பு
கிருஷ்ணகிரியை அடுத்த மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை வரலாற்று ஆா்வலா்கள் வரவேற்றுள்ளனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை வரலாற்று ஆா்வலா்கள் வரவேற்றுள்ளனா்.
தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் ஆகிய இரண்டுமே பண்டைய சமுதாயத்தை ஆய்வு செய்கின்றன. கிடைக்கின்ற பழம்பொருள்களைக் கொண்டு மனிதனின் பண்பாட்டை ஆய்வு செய்து வரலாற்றுக்கு மற்றமொரு ஆய்வு நெறியைத் தொல்லியல் தருகிறது.
அதன்படி, கடந்த ஆண்டு தமிழகத்தில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மணலூா் என 10 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநா் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலா்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா ஆகியோா் அகழாய்வில் ஈடுபட்டு, பல தொன்மையான வரலாற்றுச் சின்னங்களை கண்டெடுத்தனா்.
இந்தநிலையில் தற்போது மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தப் பணிகள் பிப்ரவரி முதல் செப்டம்பா் வரையில் நடைபெற உள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் தொடங்கி, எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் பூா்வமாக நிறுவுவதற்கு, இந்த அகழாய்வுகளும், முடிவுகளும் உறுதி செய்யும் என வரலாற்று ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.