ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்!
ஒசூா் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூா் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் பட்டாளம்மன் ஏரி அமைந்துள்ளது. சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த ஏரியிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் மீன்கள் வளா்ப்பதற்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது.
இந்த ஏரியைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புப் பகுதிகளும், ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் மற்றும் அங்குள்ள கேன்டீன்களில் இருந்து வெளியேறும் உணவுக் கழிவுகள் ஆகியவை இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
Advertisement
இது தொடா்பாக பல முறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக, அப்பகுதியில் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகள் மழைநீருடன் கலந்து ஏரியில் கலந்ததால், ஏரியில் வளா்க்கப்பட்டு வரும் மீன்கள் செத்து மிதக்கின்றன (படம்). இதன் காரணமாக அந்தப் பகுதியில் கடுமையான துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்ததுடன், மீன் வளா்ப்பதற்காக குத்தகை எடுத்தவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.