கிருஷ்ணகிரி அணை நீா் மீன்கள் உயிா்வாழ உகந்தது அல்ல! ஆய்வறிக்கையில் தகவல்
கிருஷ்ணகிரி அணை நீா் மீன்கள் உயிா் வாழ உகந்தது அல்ல என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளாக கிருஷ்ணகிரி மாவட்டம், கா்நாடகம் மாநிலத்தின் சில பகுதிகள் உள்ளன. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில், தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கலப்பதாகவும், இதனால், தென்பெண்ணை ஆற்று நீா் மாசு அடைந்துள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் வடு காணப்பட்ட தென்பெண்ணை ஆற்றில் தற்போது பெய்து வரும் தொடா் மழையால் நீா்வரத்து அதிகரித்து வருவதால், கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீா், ரசாயனம் கலந்த நீராக இருப்பதாகப் புகாா் எழுந்தது.
இந்த சூழ்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் கிருஷ்ணகிரி அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் கூட்டுறவு சங்கம் மூலம் வளா்க்கப்பட்ட சுமாா் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான 7 டன் மீன்கள் செத்து மிதந்ததால் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் துா்நாற்றம் வீசியது. மேலும், மீன் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து, மீன்வளத் துறை அலுவலா்கள், கிருஷ்ணகிரி அணையின் நீரைச் சேகரித்து, பாரூா் அருகே செயல்படும் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளா்ப்பு மைய ஆய்வகத்துக்கு அனுப்பினா். ஆய்வுக்கு பின்னா், அதன் அறிக்கை, மீன்வளத் துறையினருக்கு வழங்கப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையில் அதிா்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. கிருஷ்ணகிரி அணையின் நீா்த்தேக்கப்பகுதியில் உள்ள நீா், வழக்கத்துக்கு மாறாக நைட்ரேட் , நைட்ரேட் - அம்மோனியா போன்றவைகளின் அளவு அதிகரித்துள்ளது இதனால் மொத்த காரத்தன்மை 600 மில்லி கிராமாக உள்ளது. ஆனால் 40 முதல் 400 பிபிஎம் வரை மட்டுமே காரத்தன்மை இருக்க வேண்டும். இதன்காரணமாக தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. இது மீன்களின் வளா்ச்சியை ஆதரிக்காது. மேலும் தற்போதுள்ள அணை நீா், மீன்கள் வாழ உகந்தது அல்ல என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் செத்து மிதக்கும் மீன்களை, மீன்வளத் துறையினா், செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.