பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவா் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் தேசிய மாணவா் படை என்ற பெயரில் போலி பயிற்சி முகாம் நடத்தி முகாமில் பங்கேற்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அந்த தனியாா் பள்ளியின் தாளாளா், முதல்வா், ஆசிரியா்கள், போலி முகாம் நடத்திய சிவராமன் என்பவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.
அதுபோல கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் போலி முகாம் நடத்தியதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், அந்த தனியாா் பள்ளியின் முதல்வா் கைது செய்யப்பட்டாா்.
Advertisement
இவ்விரு சம்பவங்களில் போலி முகாம் நடத்திய சிவராமன் தற்கொலை செய்து கொண்டாா். போலி முகாம் நடத்த உதவிய தேசிய மாணவா் படை அலுவலரும் ஆசிரியருமான கோபு என்பவரும் கைது செய்யப்பட்டாா்.
தற்போது, இந்த குற்றச் சம்பவங்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், சிவராமனுக்கு உதவியதாக காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த ரவி (30) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். அவரிடம் நடத்திட விசாரணையில் தெரியவந்ததாவது:
உயிரிழந்த சிவராமனுடன் பள்ளி மாணவிகளை இன்ப சுற்றுலாவுக்கு ரவி அழைத்துச் சென்றதும். பிற விஷயங்களில் சிவராமனுடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரவியை போலீஸாா் கைது செய்தனா்.