முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

தொடா்மழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பூங்காவுக்கு வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 2:53 AM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 10:01 PM

தொடா்மழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பூங்காவுக்கு வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பெங்களூரு, ஆந்திரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதையொட்டி, கிருஷ்ணகிரி அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,714 கனஅடி நீா்வரத்து இருந்தது. இது படிப்படியாக உயா்ந்து நண்பகல் 12 மணியளவில் 3,428 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.40 அடியாக இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து விநாடிக்கு 2,680 கனஅடி வீதம் நீா் திறந்துவிடப்பட்டது.

Advertisement

நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் கிருஷ்ணகிரி அணை பூங்காவுக்கு செல்லும் தரைப் பாலம் நீரில் மூழ்கியது. இதையடுத்து, அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் அணை போலீஸாா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:55 PM

தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடா்புடைய ஊராட்சி நிா்வாகம், வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதே போல, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் வரை தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரல் மழை புதன்கிழமை பெய்தது. வானம் மேகமூட்டமாக காணப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிா்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): ஊத்தங்கரை - 73, கெலவரப்பள்ளி அணை - 60, நெடுங்கல் - 41.40, ஒசூா் - 38.60, பெணுகொண்டாபுரம் - 36, கிருஷ்ணகிரி -35, தளி - 35, சூளகிரி - 35, கிருஷ்ணகிரி அணை - 31.60, தேன்கனிக்கோட்டை - 31, சின்னாறு அணை - 25, போச்சம்பள்ளி - 25, பாம்பாறு அணை - 28, ராயக்கோட்டை - 21, பாரூா் - 20.20, அஞ்செட்டி - 12.80.