கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 150 சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள 150 சமையல் உதவியாளா் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் காட்சிப்படுத்தப்படும்.
மாதிரி விண்ணப்பப் படிவங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளத்தில் விண்ணப்ப மாதிரி, இனசுழற்சி வாரியாக காலியாக உள்ள பள்ளி சத்துணவு மையங்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, உரிய விண்ணப்பத்தை நிறைவு செய்து தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். நிறைவுசெய்த விண்ணப்பத்தை 17.12.2025 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.