கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் உள்பட 7 கட்டடங்களை நீதிமன்ற உத்தரவுபடி, நகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை இடித்து அகற்றினா்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சாந்திநகா், 1-ஆவது குறுக்குத் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஓடையை ஆக்கிரமித்து வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சாந்திநகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, அப்பகுதியில் உள்ள 6 வீடுகள் மற்றும் ஒரு காா் நிறுத்துமிடம் உள்ளிட்ட கட்டடங்களை செப். 26-ஆம் தேதி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலா்கள் அகற்ற முயன்றபோது கட்டட உரிமையாளா்கள் தடுத்தனா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் காவல் ஆய்வாளா்கள் வெங்கடேஷ் பிரபு, காசிப்பாண்டியன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு கட்டடங்களை நகராட்சிப் பணியாளா்கள், பொக்லைன் இயந்திர உதவியுடன் இடித்து அகற்றினா். அப்போது,
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா், நகராட்சி புனரமைப்பு ஆய்வாளா் மலா்விழி மற்றும் மின்வாரியம், தீயணைப்புத் துறை அலுவலா்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோா் அங்கிருந்தனா்.
படவரி...
கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் நகராட்சிப் பணியாளா்கள்.