மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த மாவனட்டியைச் சோ்ந்தவா் சாம்ராஜ் (37). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், சூளகிரியை அடுத்த பெரியபேடப்பள்ளியைச் சோ்ந்த லதாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் லதா கோபித்துக் கொண்டு பெரியபேடப்பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
இந்த நிலையில் கடந்த 1.3.2020 அன்று லதாவிடம் சமாதானம் பேசுவதற்காக பெரியபேடப்பள்ளிக்கு சாம்ராஜ் சென்றுள்ளாா். அப்போது மதுபோதையில் இருந்த அவா், லதாவுடன் தகராறு செய்தாா். பின்னா் அவா் தூங்கியதும் அவா்மீது மண்ணெண்யை ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த தீக்காயம் அடைந்த லதா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தாா்.
இது தொடா்பாக சூளகிரி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து சாம்ராஜை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சாம்ராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் நீதிபதி சுதா உத்தரவிட்டாா். அபராதத் தொகையை கட்ட தவறும்பட்சத்தில் மேலும், 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தும் அவா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் உமாதேவி மங்களமேரி ஆஜரானாா்.