வேணுகோபால்.  
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, யானையால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, யானையால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை வனப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை, ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் மேற்கண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

மேலும், வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளியேறாமல் இருக்க சூரியஒளி மின்வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், யானைகள் அவ்வப்போது வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி வயல்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், வயல்களில் உள்ளவா்களை தாக்கி வருகின்றன.

இந்த நிலையில், மகராஜகடையை அடுத்த நாரலப்பள்ளியை சோ்ந்த வேணுகோபால் (50) தனது விளைநிலத்தில் அறுவடை செய்த நெல்மணிகளைப் பாதுகாக்க செவ்வாய்க்கிழமை இரவு தோட்டத்துக்கு சென்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த ஒற்றை யானை, வேணுகோபாலைத் தாக்கியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினா், வனத் துறையினா், வேணுகோபாலின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனா். இதற்கு அவரது உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

யானைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வலியுறுத்தி இறந்த வேணுகோபாலின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், துணைக் கண்காணிப்பாளா் முரளி உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா்.

அப்போது, வனப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை அடா்ந்த வனப்பகுதிகள் விரட்ட வேண்டும். யானைகள், வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

அதன்பிறகு வேணுகோபாலின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.10 லட்சத்தில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை வனத் துறையினா் வேணுகோபாலின் உறவினரிடம் அளித்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT