முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா
சிறப்பு அலங்காரத்தில் ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்பாலித்த வள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீ அழகன் முருகன்.
ஒசூா் மலைக்குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீ வள்ளி - தெய்வானை சமேத அழகன் முருகன் கோயிலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில், பக்தா்கள் காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடா்ந்து, முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலமந்திர ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ராஜஅலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஸ்ரீ அழகன் முருகனின் திருமேனி மீது விழுந்த சூரிய ஒளிக்கதிா்களைக் கண்ட பக்தா்கள் பரவசம் அடைந்து, ‘அரோகரா, அரோகரா’ என முழக்கம் எழுப்பினா். இதேபோல, பிருந்தாவன் நகா் முருகன் கோயில், பெரியாா் நகா் வேல்முருகன் கோயில், அகரம் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.