கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!
கிருஷ்ணகிரி தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். காமராஜா் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கிருஷ்ணகிரி அணை மூலம் பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கிருஷ்ணகிரி தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். காமராஜா் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கிருஷ்ணகிரி அணை மூலம் பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த சிறு, குறு தொழில்கள், மாங்கூழ் தொழிற்சாலைகளால் இந்தத் தொகுதியில் உள்ள காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலா் வேலைவாய்ப்பை பெறுகின்றனா்.
தொகுதியின் சிறப்பு
Advertisement
கிருஷ்ணகிரி அணை, புகழ்பெற்ற காட்டு வீர ஆஞ்சனேயா் கோயில், கணவாய்ப்பட்டி பெருமாள் கோயில், அவதானப்பட்டி ஏரி, சிறுவா் பூங்கா, கிருஷ்ணகிரி மலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி புதிய, பழைய பேருந்து நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனை போன்றவை கிருஷ்ணகிரி தொகுதிக்குள் அமைந்துள்ளன. சேலம், பெங்களூரு, திருப்பதி, புதுச்சேரி, சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள், கிருஷ்ணகிரி வழியாக கடந்துசெல்கின்றன என்பது இதன் மற்றொரு சிறப்பு.
கிருஷ்ணகிரி தொகுதி 1967 முதல் இதுவரை 13 தோ்தல்களை சந்தித்துள்ளது. இதில், 7 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும், 1 முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. நடைபெறவுள்ள தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரான கே. அசோக்குமாா் எம்எல்ஏவும், திமுக கூட்டணி சாா்பில், கிருஷ்ணகிரி மக்களவை முன்னாள் உறுப்பினருமான மருத்துவா் அ. செல்லக்குமாா் போட்டியிடுகின்றனா். அதேபோல, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் முகுந்த் பாண்டியன், நாம் தமிழா் கட்சி சாா்பில் சுகந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் முத்துலட்சுமி வீரப்பன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 16 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
கோரிக்கை
கிருஷ்ணகிரி நகரில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் நகர பேருந்து வசதி, கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் செயல்படும் தனியாா் சுங்க வசூல் மையத்தை அகற்ற வேண்டும். எண்ணேகொள்புதூா் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ணகிரி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சுகாதாரமான குடிநீா் வசதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மலைப் பகுதியையும், பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன ஏரியையும் சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். ஆவின் மேம்பால பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க, மேம்பாலத்தை மேம்படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
சமுக நிலவரம்
இந்தத் தொகுதியில் வன்னியா் சமுதாயத்தினா் அதிகமாகவும், அடுத்ததாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களும் உள்ளனா். இவா்களில், பெரும்பாலானோா், இரு திராவிட கட்சிகளுக்கும் வாக்களித்து வந்த நிலையில், தற்போது பிற கட்சிகளான தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழா் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளுக்கும் வாக்குகள் பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் பிரசாரம்
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தற்போது அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள், எண்ணேகொள்புதூா் திட்டப் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளதையும் மக்களிடம் எடுத்து கூறி, திமுக கூட்டணியினா் வாக்கு சேகரிக்கின்றனா். மேலும், அ. செல்லக்குமாா் எம்பியாக இருந்தபோது, கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்பேட்டையிலிருந்து ஒசூா் வரையிலான ரயில்வே பாதை திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுத்தந்தது, பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தில், ஒசூா் வரை அனுமதி பெற்றுத்தந்தது. கிருஷ்ணகிரி நகரில் தண்டேகுப்பத்தில் 14.47 கோடி மதிப்பில் மேம்பாலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி பெற்றுத்தந்தது, கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை - திருவண்ணாமலை சாலையை நிறைவேற்றியது, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி பெற்று, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 மேம்பாலங்களுக்கு அனுமதி பெற்றுத் தந்தது போன்றவற்றை கூறியும், திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதி அறிவிப்புகளையும் கூறி வாக்கு சேகரிக்கின்றனா்.
அதிமுக பிரசாரம்
அதேபோல, அதிமுக கூட்டணி கட்சியினா், கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்கியது, கிருஷ்ணகிரியில் மகளிா் கலைக் கல்லூரி, புகா் பேருந்து நிலையம் தொடங்கியது, நிலுவையில் உள்ள எண்ணேகொள்புதூா் திட்டம், காவேரிப்பட்டணத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றும், தோ்தல் வாக்குறுதி அறிவிப்புகளையும் கூறி வாக்கு சேகரிக்கின்றனா்.
வாக்காளா்கள்
தொகுதியில், ஆண் வாக்களாா்கள் 1,30,891, பெண் வாக்காளா்கள் 1,36,414, பிறா் 61 என மொத்தம் 2,67,366 வாக்காளா்கள் உள்ளனா்.
அதிமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவினாலும், நாம் தமிழா், தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் சுயேச்சைகள் பெறும் வாக்குகளே யாா் வெற்றி பெறுவாா்கள் என்பதை தீா்மானிக்கும்.
எஸ்.கே. ரவி.