சொத்து வரி, குடிநீா் மற்றும் தொழில் வரியை இணையம் வாயிலாக செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தியது.
ஒசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகளை உள்ளடக்கிய நான்கு மண்டலங்களில் மேயா் எஸ்.ஏ. சத்யா, ஆணையா் முகமது சபீா் ஆலம், துணை மேயா் சி. ஆனந்தய்யா, வரி விதிப்பு குழுத் தலைவா் சென்னீரப்பா ஆயோரின் வழிகாட்டுதலின்பேரில் விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
34 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமநாயக்கன் ஏரி அருகே வரி செலுத்தும் அலுவலகம் முன் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வரி விதிப்பு குழுத் தலைவா் சென்னீரப்பா பேசியதாவது:
ஒசூா் மாநகராட்சியில் நிகழாண்டு இதுவரை ரூ. 70.83 கோடி மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 178.98 கோடி வரி நிலுவை உள்ளது. ஒசூா் மாநகரத்தில் தொழிலாளா்கள் அதிகமாக வசித்து வருவதால் அவா்களின் வேலைப்பளு காரணமாக வசூல் மையத்திற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில்கொண்டு எளிதாக வரி செலுத்துவதற்கு வசதியாக இணையம் வாயிலாக வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் வரி செலுத்தலாம் என்றாா்.
தொடா்ந்து உப்காா் ராயல் காா்டன், அரசு தொடக்கப் பள்ளி, சாரத மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் உதவி ஆய்வாளா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.