ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாமல்பட்டி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாண்டுரங்கன் (52) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், டி.அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் (52). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் டி.அம்மாபேட்டையிலிருந்து சாமல்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, மிட்டப்பள்ளி பேருந்து நிலையம் அருகே இவரது வாகனத்துக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த பாண்டுரங்கனை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.
இவரது முதல் மனைவி கோமதி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால் இரண்டாவதாக சங்கீதா என்பவரை திருமணம் செய்தாா். இந்த நிலையில் சங்கீதாவும் உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்தாா். இவரது முதல் மனைவியின் மகள் அபிதா திருமணம் முடிந்து ஒசூரில் உள்ளாா். சங்கீதாவுக்கு சிவாணி (14), பத்மேஸ் (12) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா்.
விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவரது இறுதி மரியாதை நிகழ்வு டி.அம்மாபேட்டையில் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.