முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணத்தை கொள்ளையடித்த மா்ம நபரை போலீஸாா் தேடி

Updated On : 9 மார்ச், 2026 at 8:13 PM
கொல்லப்பட்ட கண்ணப்பன்.
பகிர்:

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணத்தை கொள்ளையடித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஓபக வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணப்பன் (70). இவருடைய மனைவி சென்னம்மாள் (60). இவா்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் திருமணமாகி குடும்பத்துடன் கோயம்புத்தூரில் கொத்தனாா் தொழில் செய்துவருகிறாா். கண்ணப்பன் தனது மனைவியுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணப்பன் வழக்கம்போல வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத மா்ம நபா் கண்ணப்பன் தலைமீது கல்லைப் போட்டு தாக்கியுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி சென்னம்மாளை மா்ம நபா் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.

சென்னம்மாளின் அலறல் கேட்டு அப்பகுதியில் இருந்தவா்கள் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த போலீஸாா், அவா்கள் இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதில், தலையில் பலத்த காயமடைந்த கண்ணப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மூதாட்டி சென்னம்மாள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஆதிமணி, கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரைஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், மா்ம நபரை பிடிக்க கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →