"புதிய படைப்புகள், யுக்திகளைப் படைக்கும்
புதிய படைப்புகளும், அதற்கான யுக்திகளைப் படைக்கும் திறமைதான் வளர்ச்சிக்கு அடித்தளாக அமையும் என்றார் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி.நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை
புதிய படைப்புகளும், அதற்கான யுக்திகளைப் படைக்கும் திறமைதான் வளர்ச்சிக்கு அடித்தளாக அமையும் என்றார் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி.
நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியது:
படிப்பும், நல்ல வேலையுமே ஒவ்வொருவரின் வாழ்க்கை மேன்மையடைய முக்கிய அம்சங்களாகும். அத்தகைய அம்சங்களை பெற, 50 சதம் அவரவர் தனித் திறமைகளும், மீதம் 50 சதம் புறச் சூழ்நிலைகளும் காரணங்களாக விளங்குகின்றன. நாட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருந்தபோதிலும் அவற்றில் சிறந்தவற்றை தேர்வு செய்திட சிந்தனை விரிவானதாக இருக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கு தமிழும், கணிதமும் மிகவும் அவசியமாகும். எந்தப் பட்டம் படித்தாலும் அதில் கணிதத்தை கலந்து படிப்பதே சிறப்பாக அமையும்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் திறமை வாய்ந்தவர்களாக உயர்ந்திட தினம்தோறும் ஏன் எதற்கு எப்படி என்ற வினாக்களுடன் கூடிய சந்தேகங்களை எழுப்பி அதற்கான விடைகளை ஆராய்ந்திட வேண்டும். அத்துடன் இன்று நான் எதைப் பெற்றேன், இன்று நான் எதைக் கற்றுக்கொண்டேன், இன்று நான் சமுதாயத்துக்காக என்ன உதவி செய்தேன் என்ற கேள்விகளுக்கு கிடைக்கிற பதில்களே தனிமனித முன்னேற்றத்துக்கும், சமூக மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும்.
முன்பு 57 சத மக்கள் கிராமங்களிலும், 25 சத மக்கள் நகரங்களிலும் வாழ்ந்தனர். தற்போது அது தலைகீழாக மாறி 58 சத மக்கள் நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதன் கிராமச் சூழலை விட்டு நகர நாகரிக சூழலுக்கு மாறிக் கொண்டுள்ளான். இந்தச் சூழலில், நல்ல மதிப்பெண் பெறுவதும், நன்றாக கட்டுரை வாசிப்பதும் சாதனையாகிவிடாது. புதிய படைப்புகளும், அதற்கான புதிய யுக்திகளை படைக்கும் திறனாளிகளாக உருவாக வேண்டும். அதன் மூலம், நல்ல சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது அலைபேசி இல்லாத இடங்களே இல்லை. கிராமப்புற மக்களும் இணையளத்தின் அவசியத்தை அறியும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துள்ளது. இந்த ஓட்டம் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டில் இருந்தபடியே அனைத்து அறிவியல் பாடங்களையும் படிக்கும் நிலை உருவாகும். இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், 720 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், பல்கலை. அளவில் முதலிடம் பிடித்த மு.செந்தாமரை (எம்ஏ தமிழ்), எம்.தேவி (பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ்), எம்.சசிகலா (பிஎஸ்சி உடல்கல்வி) ஆகியோருக்கு தங்கப் பதக்கங்களுடன், தலா ரூ.5000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
முன்னதாக விழாவுக்கு கல்லூரியின் தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் பி.கவீத்ரா நந்தினி முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் கே.எஸ்.அருள்சாமி வரவேற்றார். துணை முதல்வர்கள் என்.ராஜவேல், கே.கே.கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.