ஆறு மாதங்களில் தமிழகம் மின்மிகை மாநிலமாகும்
தமிழக அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால் அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு சீராக்கப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழும் என்றார் தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால் அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு சீராக்கப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழும் என்றார் தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி.
குமாரபாளையம் எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 248 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் எஸ்எஸ்எம்.பி. இளங்கோ வரவேற்றார்.
விழாவில் மடிக் கணினிகளை வழங்கி அமைச்சர் தங்கமணி மேலும் பேசியது:
வாழ்வில் மாணவ சமுதாயம் கல்வியால் விழிப்புணர்வு பெற வேண்டும், உயர்ந்த பதவிகளுக்கு சென்று முன்னேற வேண்டும் எனத் தமிழக முதல்வர் பல்வேறு சலுகைகள், திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதனை உணர்ந்து மாணவர்கள் கல்வி பெற வேண்டும்.
கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை, தமிழகத்துக்கு தேவையான 8500 மெகாவாட்டைக் காட்டிலும் உபரியாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தமிழகம் கர்நாடக மாநிலத்துக்கு விற்பனை செய்தது.
தொடர்ந்து திமுக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேட்டால் மின் உற்பத்தி 6000 மெகாவாட்டாக குறைந்ததால் தற்போது தமிழக மக்கள் மின் வெட்டால் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
மத்திய அரசு பாகிஸ்தானுக்கு மின்சாரத்தை வழங்கி வரும் நிலையில், தமிழகத்துக்கு தர மறுக்கிறது.
தமிழகத்தின் உரிமைகளை நீதிமன்றத்தின் மூலமாக போராடிப் பெற வேண்டிய நிலை உள்ளது. எது நல்லது, கெட்டது என சிந்தித்து அறியும் ஆற்றல் பெற்ற கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என உணர வேண்டும். என்றார் அவர்.
நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், பள்ளிப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.செந்தில், குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.