நாமக்கல்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு முதலீட்டாளர்கள் போராட்டம்

தினமணி

நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நாமக்கல்-சேலம் சாலை முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே வணிக வளாகத்தில் தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனம் மூலம் ரூ. 10,000 முதல் ரூ. 10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வந்தது. இதில் பல முதலீட்டாளர்கள் தினமும், சிலர் மாதம் ஒருமுறையும் பணம் செலுத்தி வந்தனர்.
 கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதலீட்டாளர்களுக்கு சரியாக முதிர்வு தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நிதிநிறுவனம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் வியாழக்கிழமை காலை மூடப்பட்ட நிதி நிறுவனத்தை அதில் பணியாற்றி வந்த மண்டல மேலாளர் திறந்து உள்ளே சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதில் முதலீடு செய்த ஏராளமான முதலீட்டாளர்கள் அங்கு குவிந்தனர்.
 அவர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு செலுத்திய பணத்தை உடனடியாக நிதி நிறுவனம் திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
 மேலும் அங்கு வந்த நிதி நிறுவன மண்டல மேலாளரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் வரும் 28-ஆம் தேதிக்குள் அனைவரின் பணத்தையும் திருப்பிக் கொடுப்பதாகக் கூறினார்.
 ஆனால், அதை ஏற்க மறுத்த முதலீட்டாளர்கள், அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 இதனிடையே அங்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்களை சமரசம் செய்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
 பின்னர் விசாரணைக்காக போலீஸார் மண்டல மேலாளரை நாமக்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT