குமாரபாளையம் அருகேயுள்ள நல்லாம்பாளையம் ஏரியிலிருந்து விவசாயப் பணிகளுக்கு வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியால் நீர்நிலைகள் தண்ணீரின்றிக் காணப்படும் நிலையில், நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, ஏரி, குளங்களில் விவசாயப் பணிகளுக்கு வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது.
குமாரபாளையத்தை அடுத்த நல்லம்பாளையம் ஏரியில் வண்டல் மண் எடுக்க 14 விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, மண் அள்ளும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன் மேற்பார்வையில் நடைபெறும் இப்பணியில், ஏரியிலிருந்து ஒரு மீட்டர் ஆழம் வரையில் மண் அள்ளப்படும்.
சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் முதல்கட்டமாக 14 விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு விவசாயி 30 யூனிட் மண் எடுத்துக் கொள்ளலாம். அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மண் எடுக்கக் கூடாது எனவும், வண்டல் மண்ணை தங்கள் விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். மண் அள்ளப்படும் பணியினை வருவாய்த் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.