விபத்தில் உயிரிழந்த நூற்பாலை தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
பள்ளிபாளையம் அருகே வாகன விபத்தில் உயிரிழந்த தனியார் நூற்பாலை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் அருகே வாகன விபத்தில் உயிரிழந்த தனியார் நூற்பாலை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் அருகே உள்ள காவடியாங்காடு பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி தனியார் நூற்பாலை வேன் விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 6 பெண்கள் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு அரசும், ஆலை நிர்வாகமும் ரூ.20 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் தனபால் தலைமையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் அண்மையில் மனு அளித்தனர்.
மேலும், நிவாரணம் வழங்கக் கோரி வரும் 10-ஆம் தேதி ஈரோடு தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், பள்ளிபாளையத்தில் உள்ள அனைத்து நூற்பாலைகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஆலை நிர்வாகம் இயக்கும் வாகனங்களின் வேக கட்டுபாட்டை கண்டறிய வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.