முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் 8-ஆம் நூற்றாண்டு பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டெடுப்பு

கொல்லிமலை கரையான்காடு பகுதியில் 8-ஆம் நூற்றாண்டு பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 மே, 2018 at 2:42 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கொல்லிமலை கரையான்காடு பகுதியில் 8-ஆம் நூற்றாண்டு பல்லவர் கால ஐயனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தொல்லியல் அடையாளங்களைக் கண்டறியும் வகையில் தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர் பிரியா கிருஷ்ணன் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தற்போது அவர் கரையான்காடு என்ற இடத்தில் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ஐயனார் சிற்பத்தைக் கண்டெடுத்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
கொல்லிமலையில் பல தொல்லியல் இடங்கள் காணப்படுகின்றன. கொல்லிமலை சங்கக் காலத்தில் வல்வில் ஓரி எனும் கடையேழு வள்ளல் ஆட்சிக்குள்பட்ட பகுதியாகவும், 14 நாடுகளைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது.
சங்கக் காலம் தொட்டு மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாக இருந்திருக்கிறது என்பது சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது. கரையான்காடு பகுதியில் அந்தக் கிராம மக்கள் வணங்கி வரும் விநாயகர் கோயில் உள்ளது.
அப் பகுதி மக்கள் பல காலமாக விநாயகருடன் புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய பளபளப்பான புதிய கற்கால கருவிகளையும் வைத்து வணங்கி வருகின்றனர். இது ஆய்வுக்குரியதாகும்.
இந்த விநாயகர் கோயிலின் எதிர்புறமாகச் சிறு கூரையில் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள சிற்பம் ஐயனார் என்ற பெயரில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கருமையான உருவமும்,மெலிந்த தேகமும் கொண்டு விளங்கும் ஆறடி உயரமுள்ள சிற்பமாகும். இந்த ஐயனார் சிற்பம் ஜடாபாரம் எனும் தலை அலங்காரத்துடனும், தண்ட ஹஸ்தமுடனும், அமர்ந்த நிலையில் ஒரு காலை தொங்கவிட்டு மற்றொரு காலை மடக்கி அமர்ந்திருக்கும் உத்குடிகாசனம் எனும் ஆசனமுடனும், கழுத்தில் கண்டிகை, சவடி அணிந்தும், இடது தோளிலிருந்து கீழாக பூணூல் மற்றும் உதிர பந்தம் அணிந்தும், கால்களில் வீரக்கழல் அணிந்தும் காணப்படுகின்றன.
இருப்பினும் இந்த ஐயனார் சிற்பத்தை சமண சமயத்தில் ஸ்ரீபிரம்ம தேவர் என்று அழைப்பர் என்பது சமண ஆய்வாளர்களின் மாற்றுக் கருத்தாகவும் முன் வைக்கப்படுகிறது. ஐயன், ஐயனார், சாத்தன், சாத்தனார், சாஸ்தா என்ற வேறு பெயர்களாலும் ஸ்ரீபிரம்ம தேவர் அழைக்கப்படுகிறார் என்றும், வீரம், யோகம், ஞானம், தவம், செல்வம் ஆகியவற்றுக்குத் தேவதையாக கருதப்படுபவர் ஸ்ரீபிரம்ம தேவர் என்பதும் சமண ஆய்வாளர்களின் கருத்தாகும். கொல்லிமலையில் பல சமண தடயங்கள் காணக் கிடைக்கின்றன. இங்கு சமணப் பள்ளி இருந்திருக்கலாம் என்ற கருத்தையும் அவர்கள் முன் வைக்கின்றனர். பலர் இதுபோன்று சிறப்புமிக்க தொல்லியல் இடங்களைக் கண்டும் ஆவணப்படுத்துவது இல்லை என்பது வருத்ததிற்குரியது.
இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்கச் செய்திகளை மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.