நாமக்கல்லில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி
பணியின்போது மரணம் அடைந்த போலீஸாருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பணியின்போது மரணம் அடைந்த போலீஸாருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டு, அக்டோபர் 21-ஆம் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் நாள், காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு தலைமை வகித்து, காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள், இந்தியா முழுவதும் பணியின்போது நிகழாண்டு வீரமரணம் அடைந்த 414 போலீஸாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த 42 போலீஸார் வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு வீர வணக்கம் செலுத்தினர்.
இந் நிகழ்ச்சியில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. வீர மரணமடைந்த போலீஸார் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் எஸ்.செந்தில், சுஜாதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஊர்க் காவல்படை ஏரியா கமாண்டர் தில்லைக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.