குமாரபாளையம் கோட்டைமேடு: பத்ரகாளியம்மன் கோயிலில் திருடப்பட்ட வெள்ளிக் கவசங்கள் மீட்பு
குமாரபாளையம் அருகேயுள்ள கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் திருடப்பட்ட வெள்ளிக் கவசங்கள்
குமாரபாளையம் அருகேயுள்ள கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் திருடப்பட்ட வெள்ளிக் கவசங்கள் அருகில் உள்ள விவசாய நிலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை
மீட்கப்பட்டது.
குமாரபாளையத்தை அடுத்துள்ள கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி பூட்டை உடைத்துப் புகுந்த மர்மநபர்கள் அம்மனுக்கு அலங்கரிக்கப்படும் வெள்ளிக் கவசம் மற்றும் காணிக்கையைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கோயிலுக்கு அருகில் விவசாயி சின்னசாமி என்பவர் தனது நெல் வயலில் அறுவடையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மூட்டை கிடந்துள்ளது. அதில் அம்மனுக்கு அலங்கரிக்கப்படும் வெள்ளிக் கவசங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குமாரபாளையம் போலீஸார் வெள்ளிக் கவசத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன், இரண்டரைக் கிலோ எடையுள்ள கவசங்கள் எனப் புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால், மீட்கப்பட்ட வெள்ளிக் கவசம் 8 துண்டுகளாகவும், சுமார் 12 கிலோ எடையில் இருப்பதும் தெரியவந்தது. இவை, வெள்ளிக் கவசங்களா அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்ட கவசங்களா என நகை பரிசோதகர்களைக் கொண்டு சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.