வகுப்பறைக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்: ஆசிரியர்கள், மாணவர்கள் அவதி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில், கடந்த சில மாதங்களாக, வகுப்பறைக்குள் புகுந்து இரண்டு குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில், கடந்த சில மாதங்களாக, வகுப்பறைக்குள் புகுந்து இரண்டு குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நாமக்கல்- மோகனூர் சாலையில், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இருபாலர் கல்லூரியான இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இக் கல்லூரி மலைப் பகுதியில் அமைந்துள்ளதால், குரங்குகள் அட்டகாசம் சற்று அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும், இரண்டு குரங்குகள் திடீரென வகுப்பறைக்குள் நுழைவதும், கல்லூரி வராண்டாவில் அமர்ந்தபடி இயற்கை உபாதை கழிப்பதுமாக உள்ளன. இதனால், மாணவ, மாணவியர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அவற்றின் புகலிடமாக கல்லூரி வளாகம் மாறியுள்ளது.
இது குறித்து அக் கல்லூரிப் பேராசிரியர்கள் கூறியது; கரட்டுப் பகுதியில் கல்லூரி அமைந்திருப்பதால் குரங்குகள் நடமாட்டம் இருக்கத்தான் செய்கிறது. இது இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாக உள்ளது. தற்போதைய நிலையில் இரு குரங்குகள் அட்டகாசம் சற்று அதிகமாகவே உள்ளது. கல்லூரி வளாகத்தில் அவை இயற்கை உபாதை கழித்து விட்டுச் செல்வதால், சுத்தம் செய்வது என்பது மிகவும் சிரமமாக உள்ளது. ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். வனத் துறையினர் அவற்றை பிடித்துச் சென்று கல்லூரிக்குள் வராதவாறு தொலைவான இடத்தில் விட வேண்டும் என்றனர்.