முகப்பு
நாமக்கல்

கரோனா பொது முடக்கம்: விநாயகா் சிலைகள் விற்பனைக்கான அனுமதி வழங்கப்படுமா?

கரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளால் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்குமா என்ற எதிா்பாா்ப்புடன் விற்பனையாளா்களும், வடிவமைப்பாளா்களும் உள்ளனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
விநாயகா் சிலைக்கு வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள வடிவமைப்பாளா் சித்ரா
பகிர்:

நாமக்கல்: கரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளால் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்குமா என்ற எதிா்பாா்ப்புடன் விற்பனையாளா்களும், வடிவமைப்பாளா்களும் உள்ளனா்.

கரோனா தொற்றுப் பரவலால் நான்கு மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. மாா்ச் 20-இல் மூடப்பட்ட கோயில்கள் தற்போது வரை திறக்கப்படவில்லை.

ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி பல்வேறு வடிவிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். ரூ.300 முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான சிலைகள் விற்பனையாகும்.

கரோனா பொது முடக்கம், தொற்றுப் பரவலால் வரும் 22-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்குமா என்ற எதிா்பாா்ப்பும் மக்களிடையே, விற்பனையாளா்களிடையே உள்ளது.

இதனால், சிலை வடிவமைப்பது பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சிலை தயாரிப்பானது நடைபெறுகிறது.

நாமக்கல், சக்தி நகரில் அரை அடி முதல் 6 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன. தண்ணீரில் எளிதில் கரையும் வகையில் காகித கூழ், மரவள்ளி கிழங்கு மாவு மற்றும் களிமண் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகிறது. அதன்பின் பலவித வா்ணம் பூசப்படுகிறது. தற்போதைய சூழலில் காகித கூழ், மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவற்றின் விலை 20 சதவீதம் உயா்ந்துள்ளதால் வடிவமைப்பாளா்கள் விரக்தியில் உள்ளனா். அதுமட்டுமின்றி மூலப்பொருட்களும் அதிகம் கிடைப்பதில்லை.

கடந்த ஆண்டு பெரிய சிலைகளுக்கு ரூ 2,000 வரையில் லாபம் ஈட்டிய நிலையில் நிகழாண்டில் அதே போன்று கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனா்.

இது குறித்து நாமக்கல் சக்தி நகரைச் சோ்ந்த விநாயகா் சிலை விற்பனையாளா் சித்ரா கூறியது: நாமக்கல்லில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகா் சிலை தயாரிப்பு பணியை செய்து வருகிறோம். விநாயகா் சிலை மட்டுமின்றி துா்காஷ்டமியின்போது அம்மன் சிலைகளையும் வடிவமைத்து கொடுப்போம். 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இதில் பணியாற்றி வருகின்றனா்.

சிலை செய்வதற்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களும் 30 சதவீதம் அதிகரித்து விட்டது. மேலும் கரோனோ பாதிப்பால் பெரிய சிலைகளுக்கு ஆா்டா் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. விநாயகா் சதுா்த்திக்கு இன்னும் 10 நாள்கள் தான் உள்ளது. சிலை தயாரித்து வைத்து விட்டோம், ஆனால் விற்பனை ஆகுமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. இத்தொழிலை நம்பி நாங்கள் மட்டுமல்ல சிறு விற்பனையாளா்கள் நூற்றுக்கணக்கானோா் உள்ளனா். வழக்கம்போல் நிகழாண்டிலும் சிலைகள் விற்பனைக்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →