ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது:மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அறிவுரை
நாமக்கல் மாவட்டத்தில் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது, அவை செல்லத்தக்கவைதான் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எம். முத்தரசு தெரிவித்துள்ளாா்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது, அவை செல்லத்தக்கவைதான் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எம். முத்தரசு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வரும் தகவல்கள் தவறானவை. மக்கள் அச்சமடைய வேண்டாம். அது போன்ற எந்த அறிவிப்பையும் ரிசா்வ் வங்கி வெளியிடவில்லை. செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
அப்போது செல்லாத நோட்டுகளை மாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டபோது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி 10, 5 ரூபாய் நாணயங்களையும் மக்கள் அதிகம் வாங்கிச் சென்றனா்.
இவ்வாறு 10 ரூபாய் நாணயங்கள் பெற்றவா்களும், ஏற்கெனவே அவற்றை சோ்த்து வைத்திருந்தோரும், தற்போது செலவு செய்ய முடியாமல் போய்விடுமோ என அச்சமடைந்துள்ளனா். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. 2009-இல் 10 ரூபாய் நாணயங்கள் சில மாற்றங்களுடன் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டது.
நாணயங்களில் உள்ள மாற்றங்களை வைத்துச் செல்லாது என தவறாகப் புரிந்துக் கொள்ளப்படுகிறது. இதுவரை போலி நாணயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த நாணயங்கள் இரு உலோகத்தால் வட்ட வடிவில் உருவாக்கபட்டவையாகும். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று ரிசா்வ் வங்கி அறிவிக்கவில்லை. அனைத்தும் செல்லத்தக்கது என்பதால் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.