நாமக்கல்

கவிஞர் பி.கே. முத்துசாமி மறைவு: மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்குக் கிளை பாரமா பாடலை எழுதியவர்

DIN

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு கிளை பாரமா- பெற்றெடுத்து குழந்தை தாய்க்கு பாரமா - என மக்கள் மனதில் நீங்காத பாடல் வரிகளை எழுதிய கவிஞர் பி.கே.முத்துசாமி செவ்வாய்க்கிழமை காலமானார்.

மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார், மாட்டு வண்டியிலே பொன்னு வந்தார் பொன்னு வந்தார் பொட்டி வண்டியிலே என்ற பழங்கால பட பாடலை எழுதியவரும் இவரே. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவிஞர் பி.கே.முத்துசாமி. 1920-ல் பிறந்த இவருக்கு  தற்போது வயது 100. ஆனாலும் 16 வயது இளைஞர் போல் சுறுசுறுப்பாக தனி ஒரு ஆளாய் எங்கும் புத்தகங்கள், விருதுகள் என சிறிய வீட்டில் தானே சமைத்து உண்டு வாழ்ந்து வந்தார் பி.கே.முத்துசாமி. 

மனைவி பாவாயம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த நிலையில், மகன்களும், மகளும் தனி தனியாக வெளியூரில் உள்ள நிலையில், சொந்த கிராமமான புதுப்பட்டியில் வாடகை வீட்டில் அரசு உதவி தொகை கொண்டு தனது காலத்தை கடத்தி வந்தார் இக்கவிஞர். இளமை காலத்தில் சுற்றுப்புற கிராமங்களில் நாடக மேடைகளில் பல்வேறு நாடகங்களை நடத்தியவர் இவர்.  இந்த கால பாடல் வரிகளை விட அந்த கால பாடல் வரிகள் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. அந்த வகையில், பல்வேறு படங்களுக்கு சிறப்பான பாடல் வரிகளை எழுதியவர் பி..கே.முத்துசாமி. 

திரைத்துறையின் பாலிவுட் போல் செயல்பட்டு வந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சிறந்து விளங்கிய காலம் அது. பிற்காலத்தில் கலைத்துறையில் ஜாம்பவான்களாக வலம் வந்த பலரும் சேலம் மாடர்ன்ஸ் தியேட்டரில் கலை பயிற்சி் பெற்றவர்களே. அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினால், இவருக்கு கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. 

ஏ.கே.வேலன் தயாரிப்பில் 1958 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் வெளியீடாக வந்த தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் வந்த மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு கிளை பாரமா பெற்றெடுத்து குழந்தை தாய்க்கு பாரமா என்ற பாடலும், காவேரியின் கணவன் படத்தில் வந்த மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே பொன்னு வந்தா பொன்னு வந்தா பொட்டி வண்டியிலே... என்ற பாடல் வரிகளும், சின்ன சின்ன நடை நடந்து... செம்பவள வாய் திறந்து....என்ற அதே படத்தின் பாடல் வரிகளும் இவரது எண்ணத்தில் உதிர்ந்த படைப்புகள். 

கவிஞர் முத்துசாமி அண்ணா அறுபது, பெரியார் புரட்சி காப்பியம், முதல்வர்ர் ஜெயலலிதாவை பற்றிய புரட்சி தலைவியின் புரட்சி காப்பியம் போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.  மேலும் 15 ஆயிரம் வெண்பாக்களையும் 1000 கவிதைகளும் புரட்சித்தலைவி அந்தாதி என்ற புத்தகத்தையும், பெரியார், அண்ணா, எம்ஜிஆர்.,  போன்றோரை பாராட்டி தனித்தனியே வெண்பாக்களை எழுதியுள்ளார்.  

ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிதி உதவி:

தற்போது, கலை இலக்கிய மன்றம் சார்பில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் அரசின் உதவி தொகை கிடைத்து வந்தது.  மேலும் புத்தகம் வெளியீடு செய்த வகையில், பதிப்பகம் சார்பில் மாதந்தோறும்  தொகை கிடைத்து வந்தது.  மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது நிலை அறிந்த முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, நான்கு அமைச்சர்களை இவரது வீட்டிற்கே நேரில் அனுப்பி, அதிமுக கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதனை கொண்டு வங்கியில் வரும் வட்டி வருமானம் போன்றவற்றை வைத்து ஜீவனம் செய்து வந்தார். 

கண்களுக்கு கண்ணாடி ஏதுமின்றி, 100 வயது  தொட்டும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக, அவரே சமைத்து சாப்பிட்டு  தான் பெற்ற விருதுகளோடு சிறிய வீட்டில் வாழந்து வந்த  இக்கவிஞர் மறைந்தது அக்கிராமத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT