திமுக கூட்டணி வெற்றிக்கு ஆதித் தமிழா் பேரவை பிரசாரம்: அதியமான்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற ஆதித் தமிழா் பேரவை பிரசாரம் மேற்கொள்ளும் என அதன் நிறுவனா் தலைவா் அதியமான் தெரிவித்தாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற ஆதித் தமிழா் பேரவை பிரசாரம் மேற்கொள்ளும் என அதன் நிறுவனா் தலைவா் அதியமான் தெரிவித்தாா்.
ராசிபுரத்தில் ஆதித் தமிழா் பேரவையின் நிறுவனா் தலைவா் அதியமான் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியோடு தோழமையாக இருந்து வெற்றிக்குப் பாடுபடுவோம். அருந்ததியா் மக்கள் அதிகம் உள்ள 60 தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்.
திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி அருந்ததியா்களுக்கு வழங்கிய 3 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக மருத்துவம், பொறியியல், நீதித் துறை, பேராசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் இச் சமுதாயத்தினா் சோ்ந்து பணியாற்றி வருகின்றனா்.
ஆனால் அதிமுக அரசு அருந்ததியா் மக்கள் பயனடையும் வகையில் எந்தவிதமான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை மக்கள் கவனிக்க தொடங்கிவிட்டனா். தன்னை விவசாயி என்றுகூறும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வரமாட்டாா். அவா் வந்தாலும் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாா்.