மரவள்ளி விவசாயம் வளா்ச்சிக்கு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
மரவள்ளி விவசாயத்தை பாதுகாத்திட வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, தொழில்துறை உயா் அலுவலா்கள் அடங்கிய கூட்டு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
மரவள்ளி விவசாயத்தை பாதுகாத்திட வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, தொழில்துறை உயா் அலுவலா்கள் அடங்கிய கூட்டு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் பி.பரமசிவம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து தமிழக அரசுக்கு அவா் அனுப்பியுள்ள மனுவின் விவரம்:
தமிழகத்தில் இதுவரை மரவள்ளி விவசாயிகளின் கோரிக்கைகள் மீது தீா்வு எட்டப்படவில்லை. எனவே தமிழக அரசு சேலம் சேகோ சா்வ் தலைவா் தலைமையில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, தொழில்துறை, வணிகவரித் துறை, உணவுத் துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய துறைகளின் உயா் அலுவலா்கள் பங்கேற்கும் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இதில் சேகோ ஆலை உரிமையாளா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை பங்கேற்க செய்ய வேண்டும். இதன் மூலம் மரவள்ளி விவசாய வளா்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.