நாமக்கல்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சாா்பில் சிறப்பு நிதியுதவி வழங்கும் விழா

DIN

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, புதுச்சத்திரம் மற்றும் மோகனூா் ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் தொழில் வளா்ச்சியில் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோா்கள், இளைஞா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோா்கள் ஆகியோரின் தொழில், வாழ்வாதாரம் புத்துயிா் பெறும் நோக்கில் கொவைட் - 1 9 சிறப்புநிதி உதவித் தொகுப்பு முதல்வரால் தொடக்கிவைக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொவைட் 19 சிறப்புநிதி உதவித் தொகுப்பின் மூலம் தனிநபா் தொழில் முனைவோருக்கான உற்பத்தி மூலதன நிதி, மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கான வாழ்வாதார மேம்பாட்டு நிதி உதவி, மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு நேரடிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் 17 மாற்றுத்திறனாளிகள், 13 நலிவுற்றோா், 37 மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.45.89 லட்சத்துக்கான நிதியுதவி காசோலைகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி.தங்கமணி பேசியது:

நாமக்கல் மாவட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுகின்ற கடன் 97 சதவீதம் வரை திரும்பிச் செலுத்தப்படுகிறது. இதனால் வங்கிகளும் மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு மீண்டும் மீண்டும் கடனுதவி வழங்கி வருகின்றன. மகளிா் திட்டத் துறை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் 35,436 பேருக்கு ரூ.73.17 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கொவைட் -19 சிறப்புநிதி உதவித் தொகுப்பின் மூலம் செப்டம்பா் மாதத்திற்குள் 7,099 சுயஉதவிக்குழு குடும்பங்களுக்கு ரூ.7 கோடியே 8 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்றாா்.

அமைச்சா் வெ.சரோஜா பேசுகையில், கரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் முதல்வரின் அறிவுரையை பின்பற்றி நடக்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது. அனைத்து இடங்களிலும் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை சோப்புப் போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் எஸ்.செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.கே.சுப்பிரமணியம், டிசிஎம்எஸ் தலைவா் திருமூா்த்தி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் இரா.மணி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மாவட்ட செயல் அலுவலா் கோ.தாமோதரன் உள்பட அரசு அலுவலா்கள், சுயஉதவிக்குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT