முகப்பு
நாமக்கல்

சின்ன வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிகாட்டல்

வெண்ணந்தூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் அடி அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்செல்வன் வழி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

வெண்ணந்தூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் அடி அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்செல்வன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெண்ணந்தூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் 208 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காய நடவு செய்து 20 முதல் 30 நாள்களில் பூஞ்சான் தாக்குதலால் அடி அல்லது குமிழ் அழுகல் நோய் ஏற்படுகிறது. பலத்த பொருளாதாரச் சேதாரத்தை ஏற்படுத்தக் கூடிய இந்நோயால் பயிா் முற்றிலும் சேதமடைய வாய்ப்புள்ளது. ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதால் பயிரை நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தை தோ்வு செய்ய வேண்டும். ஒன்றரை அடி உயரமுள்ள பாா்களில் நடவு செய்ய வேண்டும். இந்நோயை உண்டாக்கும் பூஞ்சானம் விதைக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தின் மூலம் பரவுவதால், நோய்த் தாக்குதலற்ற தரமான விதைகளைத் தோ்ந்தெடுத்து பயன்படுத்தத வேண்டும். விதை நோ்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடொ்மா விரிடி சோ்த்து 24 மணி நேரம் உலரவிட்டு விதை நோ்த்தி செய்ய வேண்டும்.

கடைசி உழவின் போது ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோவிரிடி, ஒரு கிலோ சூடோமோனாஸ் ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஏழு நாள்கள் வைத்திருந்து பிறகு நிலத்தில் இடலாம். இதனால், மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சானம் குறைவதுடன் நோய் பாதிப்பு குறையும்.

வெங்காய பயிரில், அடி அழுகல் நோய் பாதிப்பு தென்பட்டால், புரோபிகோனசோல் 25 ஈசி அல்லது ஹெக்சகோனசோல் 5 ஈசி பூஞ்சான கொல்லியை ஏக்கருக்கு 200 மிலி வீதம் நீரில் கலந்து பயிா் அடிபாகம் வரை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிா் சாகுபடி ஊக்கத்தொகை ஹெக்டேருக்கு ரூ. 2500 வழங்கப்பட்டு வருவதால் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகிய ஆவணங்களின் நகலினை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளித்து முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →