முகப்பு
நாமக்கல்

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தும் விவகாரம்: மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் கண்டனம்

லாரிகளுக்குப் பொருத்தும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை,  அறிவித்துள்ள நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யுமாறு தமிழக அரசு கட்டாயப்படுத்துவதாக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

Updated On : 24 நவம்பர், 2020 at 12:49 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

லாரிகளுக்குப் பொருத்தும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை, தாங்கள் அறிவித்துள்ள நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யுமாறு தமிழக அரசு கட்டாயப்படுத்துவதாக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து நாமக்கல்லில் திங்கள்கிழமை அச் சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா். குமாரசுவாமி, செயலாளா் வாங்கிலி ஆகியோா் கூட்டாக அளித்த பேட்டி:

கரோனா பொது முடக்கக் காலத்தில் லாரி தொழில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. இந்தச் சூழ்நிலையில், லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி (ஸ்பீடு கவா்னா்) பொருத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் எங்களது சம்மேளனம் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதாவது 69 நிறுவனங்களில் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், 49 நிறுவனங்கள்தான் தகுதியானவை. இதனை உயா் நீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்தில்தான் கருவியை வாங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், பழைய முறையிலேயே வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதைத் தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்தின் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இருந்தால்தான் வாகன புதுப்பிக்கு அனுமதிப்போம் என அதிகாரிகள் கூறுகின்றனா்.

இதுதொடா்பாக உயா் நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியபோதும் கேட்பதாக இல்லை. நாங்கள் 15 நாள்கள் இதற்கு கெடு விதித்தோம். அந்தக் காலக்கெடு செவ்வாய்க்கிழமை (நவ.24) நிறைவடைகிறது. அதனையும் மீறி அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்குத் தொடருவோம்.

மேலும், அகில இந்திய அளவில் வாகனங்களுக்கான ஒளிரும் வில்லைகளை (ஸ்டிக்கா்) 11 நிறுவனங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தபோதும், கா்நாடகத்தில் உள்ள குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு வற்புறுத்துகிறது. மற்ற நிறுவனங்களில் ரூ. 3,000-க்கு வாங்கும் ஒளிரும் வில்லைகள், அரசு அறிவித்த நிறுவனங்களில் ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரத்துக்கு விற்பனையாகின்றன. இதன்மூலம் லாரி உரிமையாளா்களுக்குக் கூடுதலாக ரூ. 10 ஆயிரம்வரைச் செலவாகிறது. குறிப்பிட்ட நிறுவனத்தின் ஒளிரும் வில்லைகளை ஒட்டியதற்கான ஆதாரங்களுடன்வந்தால் மட்டுமே வாகனங்களைப் புதுப்பிப்புக்கு (எப்.சி) எடுத்துக் கொள்வோம் என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

மற்றொரு புதிய நெருக்கடியாக ஜி.பி.எஸ். எனும் வாகன இருப்பிடத்தைக் கண்டறியும் கருவியைப் பொருத்த வேண்டும் என மாநில அரசு வலியுறுத்துகிறது. அதனையும் குறிப்பிட்ட நிறுவனங்களில் வாங்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனா். மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளா்களின் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்மேளத்தின் செயற்குழுவைக் கூட்டி அரசுக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்ற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதிருக்கும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.