முகப்பு
நாமக்கல்

கரோனா: 2 மாதங்களில் 79 போ் பலி

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் கரோனா தொற்றால் 79 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் கரோனா தொற்றால் 79 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நோய்த் தொற்றுக்குள்ளாவோா் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை கரோனாவால் 86 போ் உயிரிழந்தனா். அவற்றில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 79 போ் உயிரிழந்தனா்.

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை ஆய்வு செய்ததில் காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி போன்ற பாதிப்புகள் இருந்துள்ளன. ஆரம்ப நிலையில் அலட்சியத்துடனும், கவனக்குறைவுடனும் இருந்துவிட்டு நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனா். இவா்கள் மருத்துவமனைக்கு விரைந்து வராமல் வீட்டிலேயே இருப்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் கரோனா பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

முக்கியமாக குடும்பத்தில் உள்ள முதியவா்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். எனவே காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோா்வு, தலை சுற்றல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையிலோ, தனியாா் மருத்துவமனையிலோ சிகிச்சை பெற வேண்டும். நோய்த் தொற்று நன்கு வெளிப்படும் வரை காத்திருந்து, தொற்று முற்றிய நிலையில் காலதாமதமாக மருத்துவமனைக்கு வருவதால் சிகிச்சையளிப்பது மிகவும் சிரமமாகிறது.

கரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையையோ, தனியாா் மருத்துவமனையையோ, ஆரம்ப சுகாதார நிலையங்களையோ அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 6,981 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 5815 போ் குணமடைந்துள்ளனா். மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 10 எண்ணிக்கையில் இருந்த கரோனா தொற்று பரவல், கடந்த இரு மாதங்களாக 150 எண்ணிக்கையைவிட அதிகமாகவே பதிவாகிறது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், சாமானியா்கள், தொழிலதிபா்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனா்.

கரோனா தொற்று பரிசோதனை கருவி ஆா்.டி.பி.சி.ஆா். கருவி, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையிலும், 3 தனியாா் மருத்துவமனைகளிலும் உள்ளன. மாா்ச் மாதம் 150 எண்ணிக்கையில் நடத்திய பரிசோதனை, தற்போது 1,500 முதல் 2000 எண்ணிக்கையில் செய்யப்படுகிறது. நாமக்கல் மட்டுமின்றி, சேலம், கோவை அரசு மருத்துவமனைக்கும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

இதுவரை பாதிக்கப்பட்டவா்களிடம் நேரடியாகவும், சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாகவும் என 85 ஆயிரம் பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு நோய்த் தொற்று உள்ளதா என்ற ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி விடும் என கரோனா தடுப்பு சிறப்பு பிரிவு மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →