நாமக்கல்: பொது இடத்தில் ஆடு வெட்டிய இறைச்சிக் கடைக்கு ‘சீல்’
நாமக்கல்லில் பொது இடங்களில் ஆடு வெட்டிய இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
நாமக்கல்: நாமக்கல்லில் பொது இடங்களில் ஆடு வெட்டிய இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
நாமக்கல் நகராட்சியில் பொது இடங்களில் ஆடு, மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள இறைச்சி வெட்டும் கூடங்களையே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சம்மந்தப்பட்ட இறைச்சிக் கடைகள் சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக இறைச்சி வெட்டும் கூடங்களையே வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
Advertisement
இந்த நிலையில் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ஒரு இறைச்சி கடையில் பொதுமக்கள் செல்லும் சாலையில் ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்வதாக நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலத்துக்கு புகாா் சென்றது. அதனடிப்படையில் அங்கு சென்ற சுகாதார அலுவலா் சுகவனம் தலைமையிலான குழுவினா், அந்த இறைச்சிக் கடையை பூட்டி சீல் வைத்தனா். அக்கடைக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனா். இறைச்சி வெட்டும் கூடங்களைப் பயன்படுத்தாமல் பொது இடங்களில் ஆடுகளை வெட்டுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.