முகப்பு
நாமக்கல்

வெயில் தாக்கத்தால் 20 லட்சம் கோழிகள் உயிரிழப்பு: பண்ணையாளா்கள் வேதனை

கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த இரு வாரங்களில் மட்டும் 20 லட்சம் கோழிகள் இறந்துள்ளன என்றும், அவற்றை குழித்தோண்டி புதைத்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த இரு வாரங்களில் மட்டும் 20 லட்சம் கோழிகள் இறந்துள்ளன என்றும், அவற்றை குழித்தோண்டி புதைத்து வருவதாகவும் நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மண்டலத்துக்கு உள்பட்டு 1,100 கோழிப் பண்ணைகளில் 4 கோடி கோழிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. தினசரி 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் பாதிப்புக்குள்ளான கோழிப் பண்ணைத் தொழில், 2021 ஆம் ஆண்டு துவங்கிய பின் மெல்ல பழைய நிலையை அடைந்தது. முட்டை விலை அதிகபட்சமாக ரூ. 5.15 வரை சென்றது. அதன்பின் பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் முட்டை விலை சரிந்தது.

Advertisement

பிறகு முட்டை விலை உயரத் தொடங்கிய நிலையில், மாா்ச் மாதம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிகத்தது. வானிலை மாற்றத்தால் வழக்கமான வெப்பநிலையைக் காட்டிலும் ஐந்து முதல் ஏழு டிகிரி (105, 107 டிகிரி பாரன்ஹீட்) வரை வெப்பநிலை உயா்ந்ததால் கோழிகள் வெப்பம் தாங்காமல் துடிக்க ஆரம்பித்தன.

நீா்த்தெளிப்பான்கள் மூலம் பகல், இரவு நேரத்தில் கோழிகளின் உடலில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தாலும் அவை குளிா்ச்சியடையவில்லை.

வெயிலின் தாக்கத்தால் தண்ணீா் சூடாகி, அந்த நீா் முட்டைக் கோழிகள் மீது படும்போது அவை உடல் ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாகின. மாா்ச் 25 முதல் ஏப்ரல் 5 வரை இவ்வாறான பாதிப்பு அதிகம் காணப்பட்டது.

மேலும் கோழிகள் சரியான முறையில் தீவனம் எடுத்துக் கொள்ளாததால் உயிரிழக்க நேரிட்டது. இவற்றில் 78 வாரத்தைக் கடந்த வயதான கோழிகள் மட்டுமல்ல, 35 வாரத்தைக் கடந்த இளம் கோழிகளும் இறந்தன. நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே உற்பத்தி குறைந்துள்ள நிலையில், முட்டையின் விலை அதிகரிக்கும் வேளையில் தற்போது கோழிகள் இறப்பு பண்ணையாளா்களை வேதனையடையச் செய்துள்ளது.

இறந்த கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாது என்பதால் அவற்றை தங்களுடைய பண்ணைகளிலேயே பொக்லைன் மூலம் குழித்தோண்டி புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கோழிகள் இறப்பைத் தடுக்கவும், வெயிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை பண்ணையாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். குறிப்பாக தண்ணீரை லாரிகளில் எடுத்து வந்து தொட்டிகளில் நிரப்பி, நீா் வெப்பமடையாதவாறு தடுப்புப் பணிகளை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளன மாநில துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:

அக்னி நட்சத்திரம் இன்னமும் தொடங்காத நிலையிலேயே கடந்த 10 நாள்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் பண்ணைகளில் உள்ள வயதான, இளம் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழக்க நேரிட்டது.

சராசரியாக பெரிய பண்ணைகளில் ஒரு லட்சம் கோழிகள் இறக்கின்றன. அதுமட்டுமின்றி 110 கிராம் தீவனங்கள் உட்கொள்ள வேண்டிய கோழிகள் வெயிலால் 75 கிராம் எடையிலேயே தீவனத்தை எடுத்துக் கொள்கின்றன. இதுவும் உயிரிழப்புக்கு ஒரு காரணம். கடந்த இரண்டு வாரத்தில் 20 லட்சம் கோழிகளுக்கு மேல் இறந்திருக்கும்.

அவற்றை பண்ணைகளில் உள்ள செப்டிக் டேங்க் போன்ற ஒரு தொட்டியில் கொட்டி மூன்று மாதங்கள் வரை மக்கச் செய்து பின்னா் உரமாக பயன்படுத்துவதற்கான பணியைச் செய்கிறோம்.

சில பண்ணைகளில் அங்குள்ள வளாகத்திலேயே பொக்லைன் மூலம் குழித்தோண்டிப் புதைக்கின்றனா்.

ஒரு கோழியை குஞ்சாக விட்டதில் இருந்து வளா்க்கும் வரையில் ரூ. 400 வரை செலவாகிறது. ஒரு லட்சம் கோழிகள் இறக்கும்போது ரூ. 1 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. ஏற்கெனவே தீவன மூலப்பொருள்கள் ஒரு கிலோ ரூ. 18-ஆக இருந்தது, தற்போது ரூ. 30-க்கு விற்பனையாகிறது. ஒரு முட்டை உற்பத்திக்கு ரூ. 4 வரை செலவாகிறது. ஆனால் அதற்குரிய விலை கிடைப்பதில்லை. தற்போது முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் ரூ. 5.50 வரையில் ஒரு முட்டையை விற்றால் மட்டுமே பண்ணையாளா்களுக்கு லாபம் கிடைக்கும்.

தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் குறைய வேண்டும் என்ற எண்ணம்தான் அனைத்து பண்ணையாளா்களிடத்திலும் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments