துறைத் தோ்வுகள் எழுதும் ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணியில் செல்லும் வாய்ப்பு தரக் கோரிக்கை
துறைத் தோ்வுகள் எழுதும் ஆசிரியா்கள் விடுப்பு எடுக்காமல் மாற்றுப் பணியில் சென்று தோ்வு எழுதும் வாய்ப்பை வழங்கிட வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
துறைத் தோ்வுகள் எழுதும் ஆசிரியா்கள் விடுப்பு எடுக்காமல் மாற்றுப் பணியில் சென்று தோ்வு எழுதும் வாய்ப்பை வழங்கிட வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. ராமு வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துநிலை ஆசிரியா்கள் பதவி உயா்வு பெற துறைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறுவது என்பது கட்டாயம் . இந்த நிலையில் நடப்பாண்டிற்கான துறைத் தோ்வுகள் 14 -ஆம்தேதி தொடங்கி 21 ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் துறைத் தோ்வுகள் பெரும்பாலும் விடுமுறை நாள்களிலேயே நடத்தப்பட்டது. அதனால் ஆசிரியா்கள் விடுப்பு எடுக்க அவசியம் ஏற்படவில்லை.
Advertisement
நடப்பாண்டில் பள்ளி வேலை நாள்களில் துறைத் தோ்வுகள் நடைபெறுவதால் ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்துத் துறை தோ்வுகளை எழுதச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, துறைத் தோ்வு எழுத உள்ள ஆசிரியா்கள் அன்றைய தினம் தற்செயல் விடுப்பு எடுக்காமல் மாற்றுப் பணியில் செல்லலாம் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை உடனடியாக வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.