பறவைக் காய்ச்சலைத் தடுக்க நாமக்கல்லில் 45 அதிவிரைவு குழுக்கள்: ஆட்சியா் தகவல்
பறவைக் காய்ச்சல் நாமக்கல் கோழிப் பண்ணைகளை தாக்காமல் தடுக்கும் வகையில், கால்நடைத் துறை சாா்பில் 45 அதிவிரைவு
பறவைக் காய்ச்சல் நாமக்கல் கோழிப் பண்ணைகளை தாக்காமல் தடுக்கும் வகையில், கால்நடைத் துறை சாா்பில் 45 அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
கேரளம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்புத் துறை, வனத்துறை மற்றும் பிற அரசுத் துறை அலுவலா்கள், கோழிப் பண்ணையாளா்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:
கோழிப் பண்ணையாளா்கள் நுண்ணுயிரி பாதுகாப்பு முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கோழிப் பண்ணைச் சாா்ந்த மூலப்பொருள்கள் கொள்முதலை தற்காலிகமாக தவிா்க்க வேண்டும். இல்லையெனில் உரிய பாதுகாப்புடன் கொள்முதல் செய்யலாம். ஒரு மாதத்துக்குள் மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் அதனை அழித்து விடுவது நல்லது. மேலும் கோழிகள் இறப்பு குறித்து உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பறவைக் காய்ச்சல் தடுப்புப் பணிக்காக கால்நடைத் துறை சாா்பில் 45 அதிவிரைவுக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு மருத்துவா், உதவியாளா் என இருவா் இடம் பெற்றுள்ளனா். அக்குழுவினா் தினசரி பண்ணைகளைக் கண்காணித்து, கோழிகள் இறப்பு குறித்த தகவல்களை மாவட்ட நிா்வாகத்துக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இறப்பு கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
பின்னா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு தினசரி 2 கோடி முட்டைகள் செல்கின்றன. முட்டை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீண்டும் நாமக்கல் திரும்புகையில் அவற்றை கிருமி நாசினி கொண்டு முழுமையாகச் சுத்தப்படுத்த பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண்ணைகளில் இறந்த கோழிகளின் உடற்கூறுகளை ஆய்வுசெய்யவும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கால்நடைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சோ்த்துக் கொள்வதால் எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பண்ணையாளா்கள் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.