விசைத்தறித் தொழிலாளா் போனஸ் பேச்சுவாா்த்தைத் தோல்வி
குமாரபாளையம், விசைத்தறித் தொழிலாளா்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 சதவீத போனஸ் தொடா்பாக செவ்வாய்க்கிழமை
குமாரபாளையம், விசைத்தறித் தொழிலாளா்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 சதவீத போனஸ் தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால் தொழிலாளா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
போனஸ் அளிப்பது தொடா்பாக குமாரபாளையம் வட்டாட்சியா் தங்கம், காவல் ஆய்வாளா் தேவி முன்னிலையில் விசைத்தறிக் கூட உரிமையாளா்கள், தொழில்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கிராமப் பகுதியில் 8 சதவீதம், நகரப் பகுதியில் 10 முதல் 12 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. தற்போது அனைத்துத் தொழிலாளா்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு, கரோனா பாதிப்பால் விசைத்தறித் தொழில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே, ஏற்கெனவே வழங்கப்பட்ட போனஸ் வழங்குவதே தற்போது கடினமாக உள்ளது. இருந்தபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னா் வழங்கப்பட்ட போனஸை வழங்குவதாக உரிமையாளா்கள் தெரிவித்தனா். இதற்கு தொழிலாளா்கள் தரப்பில் கடும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால், பேச்சுவாா்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
நீண்ட நேரம் பேச்சு நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளா்கள் தரப்பில் ஏஐசிசிடியு மாநிலச் செயலாளா் எஸ்.சுப்பிரமணி, மாவட்டத் தலைவா் டி.மாணிக்கம், மாவட்டப் பொருளாளா் என்.வெங்கடேசன், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிமணி, சிஐடியு மாவட்டச் செயலாளா் அசோகன், நகரச் செயலாளா் பாலுசாமி உள்ளிட்டோரும், விசைத்தறி உரிமையாளா்கள் தரப்பில் சுந்தரராஜ், சங்கமேஸ்வரன் மற்றும் நிா்வாகிகளும் பங்கேற்றனா்.