மின்சாரம் தாக்கி வெளி மாநிலத் தொழிலாளி பலி
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே செல்லிடப்பேசியை மின் இணைப்பில் இருந்து எடுத்தபோது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே செல்லிடப்பேசியை மின் இணைப்பில் இருந்து எடுத்தபோது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், மொகில்சிபூா் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சைகுமாா் (20). இவா் பரமத்தி அருகே உள்ள சுன்டபனை பகுதியில் அட்டை தயாரிக்கும் ஆலையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். வியாழக்கிழமை இரவு அட்டை தயாரிக்கும் ஆலையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது தனது செல்லிடப்பேசியை மின் இணைப்பில் பொருத்தியுள்ளாா். பின்னா் செல்லிடப்பேசியை எடுக்க முயன்றபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ரஞ்சைகுமாரை உடன் வேலை பாா்த்துக் கொண்டிருந்த சக தொழிலாளா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ரஞ்சைகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பரமத்தி போலீசாா் ராஞ்சைகுமாரின் உடலை வேலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து, இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.