முகப்பு
நாமக்கல்

டிஜிட்டல் மயமாகும் நாமக்கல் நகராட்சிப் பள்ளிகள்!

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன வகுப்பறைகள் தயாராகி வருகின்றன.

Updated On : 22 ஜூலை, 2021 at 11:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன வகுப்பறைகள் தயாராகி வருகின்றன.

கரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்வி தொலைக்காட்சி, இணைய வகுப்புகள் மூலமாக மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். கரோனா பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனா். தனியாா் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் படிக்கவைத்த பெற்றோா், தற்போது அரசு பள்ளிகளில் சோ்த்துள்ளனா். இந்த நிலையில், அரசு பள்ளி ஆசிரியா்களும் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமாா் 19 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். பள்ளிகளைத் தூய்மைப்படுத்துவது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் நகராட்சி கல்வி நிதியின் கீழ் பள்ளிகள் மேம்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 17 தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் 7 பள்ளிகளில் உள்ள ஓரிரு வகுப்பறைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன வகுப்பறைகளாக (டிஜிட்டல் கிளாஸ் ரூம்) மாற்றப்பட்டுள்ளன.

Advertisement

இந்த வகுப்பறையில், 20 மாணவா்கள் அமரும் வகையில் இருக்கைகள், 10 மின் விசிறிகள், பாடம் எடுக்கும் வகையில் கரும்பலகை, டிஜிட்டல் பலகை, ஒலி பெருக்கி, நவீன கேமரா, மடிக்கணினி, கண்காணிப்பு கேமரா, வகுப்பறைக்குள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் இதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து நாமக்கல் நகராட்சி பொறியாளா் ராஜேந்திரன் கூறியதாவது:

நாமக்கல் நகராட்சி கல்வி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த ஆண்டு கோட்டை சாலையில் உள்ள இரு நகராட்சி பள்ளிகள், ராமாபுரம்புதூா் பள்ளி ஆகியவற்றில் நவீன வகுப்பறை உருவாக்கப்பட்டது. நிகழாண்டில் சின்னமுதலைப்பட்டி, முதலைப்பட்டிபுதூா், அழகு நகா், கொண்டிச்செட்டிப்பட்டியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் நவீனமாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வகுப்பறையில் இருந்து எவ்வாறு மாணவா்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் நவீன வகுப்பறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.