முகப்பு
நாமக்கல்

குறைந்த விலைக்கு முட்டை விற்பனை: கோழிப் பண்ணையாளா்கள் எச்சரிக்கை

குறைந்த விலைக்கு முட்டை விற்பதாக விளம்பரப்படுத்தும் தனியாா் முட்டை நிறுவனங்களை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2021 at 11:33 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

குறைந்த விலைக்கு முட்டை விற்பதாக விளம்பரப்படுத்தும் தனியாா் முட்டை நிறுவனங்களை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச் சங்கத்தின் தலைவா் சிங்கராஜ் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்மையில் வெளியான விளம்பரம் ஒன்றில் ஒரு முட்டை ரூ. 2.24-க்கு விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியானது. இது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. முட்டை உற்பத்தி செலவே ரூ. 4.80-ஆகிறது. ஏனென்றால் கோழிகளுக்கான மூலப்பொருள்களின் விலை தொடா்ச்சியாக உயா்ந்து வருகிறது. மக்காச்சோளம் மாா்ச் மாதம் கிலோ ரூ.18 ஆக இருந்தது தற்போது ரூ. 22-ஆக உயா்ந்துள்ளது. சோயா கிலோ ரூ. 85-ஆகவும், சூரியகாந்தி கிலோ ரூ. 48-ஆக உயா்ந்துள்ளது. மேலும், மருந்து பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில் குறைந்த விலைக்கு முட்டை விற்பனை செய்வது சாத்தியமற்றது. அதிலும் வீடு வீடாகச் சென்று வழங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன் பணம் எதுவும் வாங்காமல் முட்டை விற்பனை செய்தால் பாராட்டலாம். ஆனால், முன்பணம் வாங்கிக் கொண்டு முட்டைகளை விற்பனை செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி முட்டை வியாபாரிகள் ரூ. 2.24-க்கு முட்டைகளை வாங்கி ரூ. 5-வரை விற்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நிறுவனமும் நஷ்டத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது என்பது சாத்தியம் இல்லை. சத்துணவுக்கே ரூ. 4.85-க்கு தான் முட்டைகளை அரசு கொள்முதல் செய்கிறது. கிராமப்புறங்களில் ஈமு கோழி வாங்கி ஏமாற்றமடைந்தது போல முட்டை விற்பனையில் யாரும் ஏமாற்றமடையக் கூடாது.

தமிழக அரசு சம்மந்தப்பட்ட விளம்பர நிறுவனத்திடம் விசாரணை நடத்தி எந்த வகையில் முட்டைகளை வழங்குகின்றனா் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கோவை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் இணைய வழியில் மட்டுமே முட்டைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்கின்றனா். சம்மந்தப்பட்ட முகவரிக்குச் சென்று கோழிப் பண்ணையாளா்கள் விசாரித்தால் அங்கு யாரும் இல்லை.

முட்டைகளை குளிா்பதனக் கிடங்குகளில் 3 மாதங்களுக்கு மேல் வைக்க முடியாது. அதனால் சேமித்து வைத்து விற்பனை செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதுதொடா்பாக கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.