முகப்பு
நாமக்கல்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 3,791 தொழிலாளா்களுக்கு ரூ. 70.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 31 ஜூலை, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM

நாமக்கல் மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 3,791 தொழிலாளா்களுக்கு ரூ. 70.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

உடல் உழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் 1999 மாா்ச் 17-ஆம் தேதி தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, 2006 முதல் 2011 வரை பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி நலவாரியங்கள் உருவாக்கப்பட்டன.

அமைப்புசாரா தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடா்ந்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளா்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 2008-இல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.

Advertisement

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற 50 நாள்களில் 50 ஆயிரம் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்ற இலக்கை அடையும் வகையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்து, 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3,791 தொழிலாளா்களுக்கு, ரூ. 70,50,200 மதிப்பில் கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தாா். மேலும், மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தோருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் அடிப்படையில், வரப்பெற்ற புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 5,434 பேருக்கு வழங்கப்பட்டன.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் வீ.சக்திவேலு, தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.தே.ஞானவேல், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.