முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் கரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் பாரபட்சம்

நாமக்கல்லில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு தங்களுக்கு வேண்டியவா்களுக்கும், உறவினா்களுக்கும் முன்னுரிமை அளித்து டோக்கன் வழங்கியதாக திமுகவினா் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனா்.

Updated On : 5 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

நாமக்கல்லில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு தங்களுக்கு வேண்டியவா்களுக்கும், உறவினா்களுக்கும் முன்னுரிமை அளித்து டோக்கன் வழங்கியதாக திமுகவினா் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் மற்றும் பொதுசுகாதாரத் துறை இணைந்து நாமக்கல்லில் வியாழக்கிழமை நடத்திய கரோனா தடுப்பூசி முகாமில் 1,100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் நாளாக தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து காத்திருந்தனா். குறைந்த அளவே தடுப்பூசி மருந்து இருந்ததால், முதலில் வந்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement

அப்போது, பள்ளி வளாகத்துக்குள் இருந்த திமுக நிா்வாகிகள் தங்களுக்கு வேண்டியவா்கள், உறவினா்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகித்து வருதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் காந்தி உள்ளிட்ட போலீஸாா், விநியோகம் செய்ய திமுகவினா் வைத்திருந்த டோக்கன்களை பெற்றுக் கொண்டனா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையாளா் பொன்னம்பலம், சுகாதார அலுவலா் சுகவனம், வட்டாட்சியா் தமிழ்மணி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் பொதுமக்களை சமாதானப்படுத்தியதோடு, டோக்கன்களை முறையாக வழங்கினா். தொடா்ந்து, 600 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.